மும்பை: தாம் யாருடைய பணத்தையும் திருடவில்லை என்றும் ஓடி ஒளியவில்லை என்றும் கூறியுள்ளார் விஜய் மல்லையா.
தற்போது லண்டனில் வசிக்கும் நிலையில், தாம் இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அண்மைய ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தம்மை ‘மோசடிக்காரன்’ என எப்படி அழைக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ல் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவரை நாடு கடத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமது ‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம், 2008 வரை சீராக இயங்கியது என்றும் உலக அளவில் நிதி நெருக்கடி துவங்கியுடன், நிலைமை தலைகீழானது என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளியல் வீழ்ச்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பணம் நின்றுவிட்டது; ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது,” என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பொருளியல் சூழலை உணர்ந்து, கிங்ஃபிஷர் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறைக்க, காங்கிரசை சேர்ந்த அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தாம் சந்தித்ததாகவும் வங்கிகள் ஆதரவு வழங்கும் என கூறியதாகவும் திரு மல்லையா குறிப்பிட்டுள்ளார்.
“எனினும், நிதி நெருக்கடியால், கிங்ஃபிஷர் நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் கட்ட வேண்டிய மொத்தத் தொகை 6,203 கோடி ரூபாய். ஆனால், என் சொத்துகள் வாயிலாக, 14,000 ரூபாய் கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துள்ளன,” என்றும் விஜய் மல்லையா மேலும் கூறியுள்ளார்.