புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைப் புதன்கிழமை சந்தித்த அமைச்சர்கள் நா. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இக்கோரிக்கையை முன்வைத்தனர். மாநில நீர்வளத் துறைச் செயலர் பிரசாந்த் மு. வடநேரே, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேகதாது அணைத் திட்டம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புகளுக்கு முரணானது என்று தமிழக அரசு அறிக்கை கூறுகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனை எதிர்த்துத் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், உச்ச நீதிமன்றத்திலும் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரிப் படுகை மாநிலங்களின் சட்டபூர்வ ஒப்புதலின்றி எந்தப் புதிய திட்டத்தையும் கர்நாடகம் மேற்கொள்ளக் கூடாது என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
மேலும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கக் கூடாது என்றும் கோரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டது.
பின்னர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், “காவிரி நீர் விநியோகம் எவ்வாறு, எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை மிகச் சரியாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
“ஆனால், அதை மீறும் வகையில் உரிய முறையில் நீரைப் பகிராமல், மேகதாதில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் வளத் துறையிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது சட்ட விரோதமானது என்பதை மத்திய அமைச்சரிடம் விளக்கினோம்.
“காவிரி நதியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும் காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டபூர்வ ஒப்புதல், இசைவின்றி கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக மாநிலத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் 2018ஆம் ஆண்டுத் தீர்ப்பே இறுதியானது. அதற்கு முரணாக எவரும் செயல்பட முடியாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தோம்,” என்றனர்.
“கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கை மீது தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். அவருடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
