எந்தவொரு போராட்டக்காரரும் தனித்துவிடப்பட மாட்டார்: சிஜேபி உறுதி

எந்தவொரு போராட்டக்காரரும் தனித்துவிடப்பட மாட்டார்: சிஜேபி உறுதி

2 mins read
e810e175-1022-4863-b0cd-f6695f823788
போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என அஷுதோஷ் ரங்கா எச்சரித்துள்ளார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் எந்தவொரு போராட்டக்காரரும் தனித்துவிடப்பட மாட்டார் என்றும் அவ்விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவர் என்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத் தரப்புக்கும் அக்கட்சிக்கும் இடையே திங்கட்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் அக்கட்சியின் பேச்சாளர் சௌரவ் தாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய அரசாங்கமும் சிஜேபியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதையடுத்து, அனைத்துப் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென திரு சௌரவ் தாஸ் வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவிப்புகளை பீகார், அசாம் மாநில அரசுகள் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கும் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் மத்திய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகளும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகக் கூறினார்.

அதேநேரம், அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போகலாம் என்ற தங்களின் கவலையை மத்திய அரசுத் தரப்பிடம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் கவலைக்குப் பதிலளிக்கும் விதமாக, போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படும் என்றும் எதிர்காலத்தில் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

“பீகார் உள்துறையின் ஊடக அறிக்கையை மத்திய அரசுத் தரப்பு எங்களிடம் அளித்தது. போராட்டக்காரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், வேறு எந்தெந்த மாநில அரசுகள் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்தும் ஒன்றாக அமர்ந்து விவாதித்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

போராட்டக்காரர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக அவர்கள் மீண்டும் வீதிகளுக்கு வந்து திரும்பிப் போராட நேரிடலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிஜேபி கட்சி அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டது.

உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த சில மணி நேரங்களில் டெல்லியில் அடுத்தடுத்து சில நிகழ்வுகள் அரங்கேறின.

பேச்சுவார்த்தைகளின்போது பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதாக சிஜேபி பேச்சாளர் அஷுதோஷ் ரங்கா திங்கட்கிழமை (ஜூலை 27) குற்றஞ்சாட்டியிருந்தார்.

பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் அல்லது துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் சொன்ன அவர், போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
கரப்பான்பூச்சிமாணவர்கள்போராட்டம்காவல்துறை