ஜெனிவா: இந்தியா பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ளாது என்றும் இந்த நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தொடரில், காணொளி மூலம் உரையாற்றிய அவர், உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளால் தொடர் மோதல்கள் நிகழ்வதாக கவலை தெரிவித்தார்.
“மோதல்களால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது நல்லுறவுகள் உடைந்து, நிலைமை நிச்சயமற்றதாக மாறி வருகிறது.
“மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இந்தியா எப்போதும் தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறது.
“இந்தியாவின் அணுகுமுறை, நிதி பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்தி, எங்கள் நட்பு நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப திறனை வளர்ப்பதிலும் மனித வளங்களை, உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.
“அதே வேளையில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியுடனும் சமரசமின்றியும் இருக்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.