டேராடூன்: இந்தியாவின் வட எல்லையில் ஏற்பட்ட பனிச்சரிவில் நால்வர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐவரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணியில் ஆறு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
திபெத் எல்லையில் உள்ள மனா கிராமத்துக்கு அருகே உள்ள கட்டுமானப் பகுதியில் பிப்ரவரி 28ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் ஊழியர்கள் மொத்தம் 55 பேர் புதையுண்டனர்.
இதுவரை 50 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் உயிரிழந்துவிட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 1) கூறினர்.
இதுபற்றிக் கூறிய உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்த நெருக்கடியான நேரத்தில், பாதிக்கப்பட்டோருக்கு ஆன அனைத்து உதவிகளையும் வழங்க அரசாங்கம் முழுக் கடப்பாடு கொண்டுள்ளது ,” என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இமயமலைப் பகுதியில் குளிர் காலத்தில் பனிச்சரிவுகளும் நிலச்சரிவுகளும் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மனா கிராமத்தில் நிலவும் கடுமையான வானிலைக்குப் பயந்து குடியிருப்பாளர்கள் மலைப்பகுதியில் உள்ள தாழ்வான கிராமங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.