புதுடெல்லி: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. மாறாக, தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “காஷ்மீரை போல் அனைத்து மாநிலங்களையும் பாஜக மாற்ற நினைக்கிறது. ஆனால், இந்த மசோதா ஒரு போதும் நிறைவேறாது. இதனால் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று மசோதாக்கள் மக்களவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
“தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல; 2023ல் வந்ததே மகளிருக்கான மசோதா. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா தேச விரோதமானது. இது தேசத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி. அதை மகளிர் மசோதா போர்வையில் செய்கிறார்கள். மத்திய அரசின் இந்தச் செயல் வெட்கக்கேடானது.
“பெண்களே நம் நாட்டின் மையப் புள்ளி. இந்த அவையில் உள்ள ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வில் தாயாக, சகோதரியாக, மனைவியாக உள்ள பெண்களிடமிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டிருப்பார்கள். நேற்று இந்த அவையில் எனது சகோதரி பிரியங்கா காந்தி பேசியதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.
“இந்திய அரசியலில் தற்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கண்டு பாஜக பயப்படுகிறது. உண்மை என்பது பல நேரங்களில் இருளில்தான் மறைந்திருக்கிறது. “இருட்டைப் பார்த்து பயப்படக்கூடாது என இந்திரா காந்தி கூறியிருக்கிறார். உண்மையைப் பற்றி பேசுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை,” என்று திரு ராகுல் காந்தி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்த்து அதிகாரத்தை பறிக்கும் நோக்கம்
“தாங்கள் அடைய விரும்பும் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள, அரசியலமைப்புத் திருத்தம் ஒன்று தேவை என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்து, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதே இந்த மசோதாவின் நோக்கம். இந்தியாவின் அதிகாரக் கட்டமைப்பில் ஓபிசி மற்றும் தலித்துகளுக்கு பாஜக எவ்வித இடமும் அளிப்பதில்லை.
“உங்கள் பலம் குறைவது கண்டு நீங்கள் நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றத் துணிந்து விட்டீர்கள். முன்பு, அசாம் மற்றும் காஷ்மீரில் நீங்கள் இதைச் செய்தீர்கள். இப்போது அதைப்போலவே அனைத்து மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறீர்கள்.
“ஆனால் இந்த மசோதா ஒரு போதும் நிறைவேறாது. இதனால் தென்னிந்திய மக்களும் வடகிழக்கு மாநில மக்களும் கவலைப்பட வேண்டாம்,” என்று திரு ராகுல் பேசினார்.

