தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவசரப்படவில்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

2 mins read
d650a8bf-4786-45b9-8333-552168711af8
பியூஷ் கோயல். - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு அவசரப்படவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் என்பது இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இந்தியாவின் நலனை உறுதி செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் நாட்டின் நலனே எப்போதும் முக்கியம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இதுபோன்ற அம்சங்களை மனதிற்கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது.

“ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமான், அமெரிக்கா, சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. ஒப்பந்தம் தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சு நடக்கிறது. “இருதரப்புக்கும் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது சாத்தியமாகும்,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.

குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

“நன்கு முதிர்ச்சியடைந்த, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்திய நலன் உறுதி செய்யப்படும்போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வோம்,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.

இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

கையெழுத்தாகும் என கடந்த வாரமே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார். எனினும், ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

விவசாயம், பால் வளம் ஆகிய துறைகளில் இந்தியச் சந்தையை திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்கா வலியுறுத்தும் முக்கியமான அம்சம். ஆனால், இதை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தியாவுக்கான புதிய வரிவிதிப்பை ஜூலை 9ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அதிபர் டிரம்ப் நிர்வாகம்.

ஜூலை 8ஆம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என இந்தியத் தரப்பு எதிர்பார்ப்புடன் தெரிவித்த நிலையில், அதற்கான அவசியமோ, ஜூலை 9ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையோ எழவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்