புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2014 முதல் மருத்துவக் கல்வித்துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் மருத்துவப் படிப்புக்கான இடங்களும் இருமடங்காக அதிகரித்துள்ளன. 2014ல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387ஆக இருந்த நிலையில், தற்போது அது 844ஆக அதிகரித்துள்ளது. இது 18 விழுக்காடு வளர்ச்சி.
அதேபோல் 51,348ஆக இருந்த இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை தற்போது 139,489ஆக அதிகரித்துள்ளது. முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 31,185ஆக இருந்த நிலையில், தற்போது 86,360ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித்துறை இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறை நிலவியது.
இதனிடையே, 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவச் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு மேலும் 950 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்தப் புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கூடுதலான சேர்க்கையைத் தொடர்ந்து, தமிழகத்தின் 78 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 13,999ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் அதிக எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 15,395 இடங்களுடன் கர்நாடகா முதலிடத்திலும் 14,000 இடங்களுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

