புதுடெல்லி: இந்தியாவில் மணமுறிவு விகிதம் அதிகரித்து, குடும்பக் கட்டமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டு வரும் வேளையில் துணையின்றி வாழ்வோரின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நிலவரத்தின் அடிப்படையிலான ‘மாதிரி பதிவு முறை புள்ளிவிவர அறிக்கை 2024’ அந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைத் துணையை இழந்தோர், மணமுறிவு செய்தோர், தனித்து வாழ்வோர் என இந்திய மக்கள்தொகையில் ஒரு குழுவாக வகைப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 2014ல் 4.1 விழுக்காடு இருந்தது. பத்தாண்டுகளில் அது 3.5 விழுக்காட்டுக்குச் சரிந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் அவ்வாறு தனித்து வாழ்வோரின் விகிதம் 6.2 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காட்டுக்குச் சரிந்துள்ளது. இந்தியாவிலேயே பத்தாண்டு காலத்தில் துணையின்றி வாழ்வோர் விகிதம் அதிகமாகக் குறைந்தது அந்த மாநிலத்தில்தான்.
சத்தீஸ்கரில் 5.2 விழுக்காட்டிலிருந்து 3.6 விழுக்காட்டுக்கும் டெல்லியில் 3.6 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காட்டுக்கும் குஜராத்தில் 4.8 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காட்டுக்கும் அவர்களின் விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
நாட்டிலேயே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான பீகாரில் துணையின்றி வாழ்வோரின் விகிதம் 2.3 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
அதேவேளை தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தனித்து வாழ்வோரின் விகிதம் தேசிய நிலவரத்திற்கு மாறாக உள்ளது.
தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு துணையின்றி வாழ்ந்தோரின் விகிதம் 5.7 விழுக்காடாக இருந்த நிலையில், பத்தாண்டுகளில் அது 7.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. இந்தியாவிலேயே துணையின்றி வாழ்வோரின் விகிதம் தமிழ்நாட்டிலேயே அதிகமாக உள்ளது என்கிறது ஆய்வறிக்கை.
தொடர்புடைய செய்திகள்
கேரளாவில் 6.2 விழுக்காட்டிலிருந்து 6.3 விழுக்காட்டுக்கு அதிகரித்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பத்தாண்டுகளில் எவ்வித மாற்றமுமில்லை.
இந்திய மக்கள்தொகையில் மணமுறிவு பெற்று அல்லது துணையை இழந்து தனித்து வாழ்வோரில் பெண்களே அதிகமாக உள்ளனர் என்பதை ஆய்வு உணர்த்துகிறது.
மணமுறிவு செய்யும் அல்லது துணையை இழக்கும் ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதேசமயம், பெண்களுக்கு அந்த வாய்ப்பு அதிகமாக இல்லாததால் வாழ்க்கையை நடத்த சமூக, பொருளியல் சுமைகளை அவர்களே பெருமளவில் சுமக்கின்றனர் என்பது ஆய்விலிருந்து தெரியவருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் தனித்து வாழ்வோரில் 6.5 விழுக்காட்டினர் பெண்களாகவும் 1.9 விழுக்காட்டினர் ஆண்களாகவும் இருந்தனர். அதாவது, இரு பாலினத்திற்கும் இடையில் மும்மடங்கிற்கு மேல் வித்தியாசம் இருந்தது.
2024ஆம் ஆண்டு மக்கள்தொகை அதிகரித்த நிலையில், அவர்களின் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு, பெண்களின் விகிதம் 5.4 விழுக்காடாகவும் ஆண்களின் விகிதம் 1.6 விழுக்காடாகவும் இருந்து என்கிறது ஆய்வறிக்கை.

