கேரளாவில் ‘ஷிகெல்லா’ தொற்று எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கேரளாவில் ‘ஷிகெல்லா’ தொற்று எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

2 mins read
c2f85da9-26a9-4667-b83c-c87ca7d4788e
கேரளாவில் ஒரே மாதத்தில் 120 பேர் ஷிகெல்லா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். - கோப்புப் படம்: பாலிமர் ஊடகம்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரளாவில், ‘ஷிகெல்லா’ தொற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) அன்று மேலும் 10 பேருக்கு உறுதியானதால், இம்மாதத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

ஷிகெல்லா எனும் கிருமித் தொற்று மாசுபட்ட உணவு, தண்ணீர், சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் வழியாகப் பரவுகிறது. கேரளாவில் இந்தத் தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எரஞ்சிக்கல் பகுதியில் கண்டறியப்பட்டது.

தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். அதன்பின் வயநாடு, மலப்புரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தொற்று பரவியது.

தற்போதுவரை ஷிகெல்லா தொற்றுக்கு கேரளாவில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 10 பேருக்குத் தொற்று உறுதியானது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கேரள சுகாதார அமைச்சர் முரளீதரன், “கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர், பாலக்காட்டில் ஒருவர் என மொத்தம் 10 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது,” என்றார்.

இதன் மூலம் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 196ஆக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 120 பேரிடம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 90 விழுக்காட்டினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நிபா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த 14 பேரைக் கண்டறிந்து கண்காணிப்பில் வைத்துப் பரிசோதித்தோம். அவர்களிடம் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதால், அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று அறிக்கை வாயிலாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்