உடற்பருமனே முதல் எதிரி: விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி விதிமுறைகளைக் கடுமையாக்கும் ஏர் இந்தியா

உடற்பருமனே முதல் எதிரி: விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி விதிமுறைகளைக் கடுமையாக்கும் ஏர் இந்தியா

2 mins read
2adb8987-acb8-4523-a414-470dc6565c32
பணியாளர்கள் தங்களுடைய உடல் நிறை குறியீட்டெண்ணை இயல்பான, ஏற்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டுவர முப்பது நாள் அவகாசம் அளிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் கடுமையாக்கி உள்ளது.

அந்நிறுவனம் வகுத்துள்ள பல்வேறு புதிய தரநிலைகளை அனைத்துப் பணியாளர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றத் தவறுபவர்கள் பணி அட்டவணையில் இருந்து நீக்கப்படுதல், தற்காலிகப் பணிநீக்கம், ஊதிய இழப்புக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடற்பருமன் என்பது இனி விமானப் பணியாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக முக்கியத்துவம் பெறுகிறது. உடல் நிறை குறியீட்டெண் கொண்டவர்கள் உடற்பருமன் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், ஊதிய இழப்பையும் சந்திக்க நேரிடும்.

பணியாளர்கள் தங்களுடைய உடல் நிறை குறியீட்டெண்ணை இயல்பான, ஏற்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டுவர முப்பது நாள் அவகாசம் அளிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானப் பணியாளர்களுக்கு பணி நிமித்தம் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சிகளைத் தவிர, அவர்களுக்கென பல்வேறு உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நாடுதோறும் இயங்கிவரும் விமான நிறுவனங்கள் இதற்கென பல்வேறு விதிமுறைகளை வகுத்துச் செயல்படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரை ‘பிஎம்ஐ’ (BMI) எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் முப்பது அல்லது அதற்கும் கீழ் இருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில், அந்நிறுவனம் அமல்படுத்த உள்ள புதிய உடல்நலம் மற்றும் உடற்தகுதி இணக்கக் கொள்கையின்படி, பணியாளர்கள், விமானப் பயணத்திற்குத் தகுதியானவர்களா என்பதை முடிவு செய்வதில் இந்த உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) முக்கியக் காரணியாக உள்ளது.

வழக்கமாக விமானப் பயணத்துக்கு முன்பும் பிறகும் விமானிகளுக்கும் மற்ற விமானப் பணியாளர்களுக்கும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ள விமானிகள் கடைசியாக மது அருந்திய நேரம் கணக்கிடப்படும்.

இந்நிலையில் புதிய கொள்கையின்படி, பயிற்சி, பாதுகாப்பு நடைமுறைகளின்போதும் விமானப் பயணங்களுக்கு முன்னும் பின்னும் உட்பட, பல்வேறு கட்டங்களில் உடல் நிறை குறியீட்டெண் (BMI) சோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாகிறது.

உடல் நிறை குறியீட்டெண்ணின் அடிப்படையில் பணியாளர்கள் நான்கு பிரிவுகளின்கீழ் மதிப்பிடப்படுவர். 18 முதல் 24.9 வரையிலான வரம்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் 18 புள்ளிக்கும் குறைவாக உள்ளவர்கள் குறைந்த எடைப் பிரிவிலும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்கள் அதிக எடைப் பிரிவிலும் வகைப்படுத்தப்படுவர்.

குறைந்த எடை அல்லது அதிக எடைப் பிரிவுகளில் உள்ள விமானப் பணியாளர்கள், செயலில் உள்ள பணி அட்டவணையில் இருந்து நீக்கப்படுவர். அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் முடிவில் நடத்தப்படும் மருத்துவ மதிப்பீடுகளுக்குப் பிறகே மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்கிறது ஏர் இந்தியாவின் புதிய கொள்கை.

தகுதிபெறாத விமானி, விமானங்களை இயக்கத் தகுதியானவர் என்று அறிவிக்கப்படும் வரை, ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவார்.

குறிப்புச் சொற்கள்