புவனேஸ்வர்: டாணா புயலைச் சமாளிக்க புயல் காலங்களில் செயல்பட்ட ஆறு மாவட்ட ஆட்சியர்களை ஒடிசா அரசு நியமித்துள்ளது.
ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று புதன்கிழமை முதல் வருகிற வெள்ளி வரை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா அரசு.
மேலும் கிழக்கு கடற்கரை வழியாக பயணிக்கும் கிட்டத்தட்ட 200 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இரண்டு நாள்களுக்கு மூடப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது.
இந்தப் புயலுக்கு ‘டாணா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயலை எதிர்கொள்ள ஆளும் பா.ஜ.க அரசின் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான ஒடிசா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘டாணா’ புயல் ஒடிசா மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அத்துடன் புயல் மற்ற அருகிலுள்ள மாவட்டங்களிலும் கனமழையைத் தூண்டலாம் என்றும் அதனால் திடீர் வெள்ளப் பெருக்கு நிகழும் சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒடிசா மாநில அரசு ஏற்கெனவே பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் 20 குழுக்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களையும் அனுப்பியுள்ளது. மருத்துவர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் அந்தந்த சுகாதார மையங்களுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புயல் பாதிப்பு நிகழும் மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தாங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வகித்த அனுபவம் உள்ள 6 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிசா அரசு நியமித்துள்ளது.
மேலும், ‘பூஜ்ஜிய விபத்து’ என்பதை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அதன் முந்தைய உத்தியின்படி, ஒடிசா அரசாங்கம் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் தொடங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
“800 பல்நோக்கு புயல் முகாம்கள் தவிர, பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களைப் பயன்படுத்தி மேலும் 500 தற்காலிக தங்குமிடங்களை அரசாங்கம் தயார் செய்துள்ளது. தங்குமிடங்களில் சமைத்த உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று கூறினார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

