போபால்: கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் மேலும் ஓர் இந்தியர் இடம்பெற்றுள்ளார். அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலித் பட்டிதார் என்ற இளையர்.
19 வயதான இவருக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்துள்ளது. இதுவே அவரை உலக சாதனையாளராகவும் மாற்றிவிட்டது.
ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடி என்ற விகிதத்தில் இவரது முகத்தில் உள்ள முடி கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முடி வளர, ஹைப்பர் டிரிகோசிஸ் என்ற அரிய மருத்துவ நிலையே முக்கியக் காரணம்.
லலித் படிதார் முகத்தில் 95% முடி மட்டுமே உள்ளது. தாம் தொடக்கப் பள்ளியில் படித்தபோது பல சவால்களை எதிர்கொண்டதாகவும் வகுப்புத் தோழர்கள் தம்மைக் கண்டு பயந்ததாகவும் லலித் கூறியுள்ளார்.
“எனினும் காலப்போக்கில் அவர்கள் என்னைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு பேசத் தொடங்கியபோது தோற்றத்தில் மட்டுமே நான் வித்தியாசமாக உள்ளேன் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
“சிலர் என்னை நன்றாக நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை.
“பெரும்பாலானவர்கள் என்னிடம் கருணை காட்டுகிறார்கள். ஆனால் அதன் அளவானது ஒவ்வொருவருக்கும் இடையே மாறுபடும்,” என்றும் லலித் பட்டிதார் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இன்ஸ்டகிராம், யூடியூப் தளங்களில் இவரை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். அவற்றில் தமது அன்றாட வாழ்க்கை முறையை விவரிக்கும் புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்கிறார்.
அண்மையில் இத்தாலி சென்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியுள்ளார் லலித்.

