தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு கா‌ஷ்மீரில் ஒருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதத் தாக்குதல் என சந்தேகம்

2 mins read
c7e65195-d97c-40b1-92b3-c08196ff6682
ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர். - கோப்புப் பைடம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு கா‌ஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா நகரில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் சனிக்கிழமை (ஏப்ரல் 26) அந்நபரைச் சுட்டுக்கொன்றனர். குப்வாரா நகரின் கண்டி காஸ் பகுதியில் குலாம் ரசூல் மாக்ரே என அடையாளம் காணப்பட்டுள்ள ஆடவர், அவர் வீட்டில் தாக்கப்பட்டார் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தனர்.

அந்நபர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கொலைக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் தெரியவில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதியன்று ஜம்மு கா‌ஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுப்பயணிகள்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்மு கா‌ஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), அறுவடையை முடித்துக்கொண்டு 48 மணிநேரத்துக்குள் தங்கள் வயல்களைக் காலி செய்யுமாறு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உடனடி உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் பதற்றநிலை அதிகரித்துவரும் வேளையில் சனிக்கிழமையன்று விவசாயிகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் விவசாயிகள் ஏறத்தாழ 45,000 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்துவருகின்றனர்.

அந்த எல்லைப் பகுதி 530 கிலோமீட்டர் நீளம்கொண்டது.

விவசாயிகளுக்கு முக்கியமான காலகட்டமான இவ்வேளையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில இடங்களில் அண்மையில் பெய்த மழையால் அறுவடை பாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்