ஆடைகூட வாங்க முடியாதவர் ஆக்ஸ்ஃபர்டில் உரையாற்றும் அளவுக்கு வளர்ச்சி

ஆடைகூட வாங்க முடியாதவர் ஆக்ஸ்ஃபர்டில் உரையாற்றும் அளவுக்கு வளர்ச்சி

2 mins read
820559ad-1638-476a-bea8-0044df6160fa
ரவீந்திர மாணிக்ராவ் மெட்கார். - படம்: கனெக்டட் டு இந்தியா

மும்பை: இந்தியாவின் மகரா‌ஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரால் ஒருகாலத்தில் ஆடைகூட வாங்க முடியாமல் இருந்தது.

அதே விவசாயி ஆண்டுதோறும் கோடிக்கணக்கிலான மொத்த வருமானம் ஈட்டும் பண்ணை விலங்கு வர்த்தகத்தை உருவாக்கினார்.

இப்போது வேளாண் தொழிலதிபர் என்ற முறையில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ரவீந்திர மாணிக்ராவ் மெட்கார், 57, மகரா‌ஷ்டிர மாநில அமராவதி மாவட்டத்தில் உள்ள மாசாலா அஞ்சாங்கோன் பாரி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் நடத்தும் உலக ஆய்வு மாநாட்டில் பேச இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘எல்லாத் தரப்பினருக்கும் செயற்கை நுண்ணறிவு’ (AI for Every Mind) எனும் கருப்பொருளைக் கொண்ட அந்த மாநாடு வரும் மே மாதம் ஒன்றிலிருந்து ஐந்தாம் தேதி வரை பிரிட்டனில் நடைபெறவுள்ளது.

ஆக்ஸ்ஃபர்டுடன் சேர்ந்து உலகப் பொருளியல் மாநாடு இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்கிறது.

1984ஆம் ஆண்டில் மெட்கார் தனது வீட்டின் வெளிப்புறத்தில் பண்ணை விவசாய வர்த்தகத்தைத் தொடங்கினார். அப்போது தொடக்கக் கல்லூரி மாணவராக இருந்தார்.

தந்தை கொடுத்த 3,000 ரூபாயை வைத்துத் தொழில் தொடங்கினார்.

2006க்குள் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்தபோதும் பறவைக் காய்ச்சல் பரவலால் மெட்காரின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மனந்தளராத இவர் வங்கியில் கடன் பெற்று 2008ல் மறுபடியும் தொழில் தொடங்கினார்.

“இப்போது வங்கிக் கடன் ஏதும் இல்லாத எனக்கு, 50 ஏக்கருக்கும் அதிக பரப்பளவைக் கொண்ட பண்ணையில் 180,000க்கும் அதிகமான பறவைகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் மொத்த வருமானம் ரூ 15 கோடி,” என்றார் மெட்கார்.

குறிப்புச் சொற்கள்