இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கத்தைக் கட்டிக் காப்பதற்காக ஒரே நேரத்தில் இருவரை பெண் ஒருவர் கரம் பிடித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ‘ஹட்டி’ என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் ‘ஜோதிதாரா‘ என அழைக்கப்பெறும் பலதார மணம் எனும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதன்படி பெண் ஒருவர், இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் முறைமை கடைப்பிடிடக்கப்படுகிறது.
அதிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளைத் திருமணம் செய்யும் வழமை பரவலாக நிலவுகிறது.
அதன்படி, இமாச்சல் மாநிலம் சிர்மவுர் மாவட்டம் ‘ஷிலாய்’ எனும் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சௌஹான் எனும் மணப்பெண் பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்டார்.
வெகுவிமரிசையாக நடைபெற்ற இத்திருமணத்தில் ‘ஹட்டி‘ சமூகப் பழங்குடியினர், கிராமவாசிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கணவர்களுக்கு நடுவே நின்றுகொண்டு, மணப்பெண் சுனிதா எடுத்துக்கொண்ட புகைபடமும் காணொளியும் இணையத்தில் பரவியது.
இத்திருமண விழா ஜூலை 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை மூன்று நாட்கள் நடைபெற்றதாகச் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மணமகனில் ஒருவரான பிரதீப் அரசுப் பணி வகிப்பவர் என்றும் அவரது சகோதரரும் மற்றொரு மணமகனுமான கபில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் என்றும் அறியப்படுகிறது.
எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல், மூவரும் சம்மதித்தே இத்திருமணம் நடைபெற்றதாக மணமக்களின் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு பெண் இரண்டு ஆண்களையோ அல்லது ஓர் ஆண் இருப் பெண்களையோ மணமுடிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றபோதும் இமாச்சலப் பிரதேசம், உத்தராகாண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களிடையே இதுபோன்ற வழக்கம் தலைமுறைகள் கடந்தும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அது அனுமதிக்கபடுவதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

