கேரளாவில் தொடரும் மழை, வெள்ளம்; இறந்தவர்களின் எண்ணிக்கை 11க்கு உயர்வு

கேரளாவில் தொடரும் மழை, வெள்ளம்; இறந்தவர்களின் எண்ணிக்கை 11க்கு உயர்வு

2 mins read
8a5623fe-a721-43ac-8e43-1d08797bae39
கோழிக்கோடு, மூழிக்கால் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை படகுகள் மூலமாக மீட்கப்படுகின்றனர். - படம்: த இண்டியன் எக்ஸ்பிரஸ்

கொச்சி: கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை, வெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) பகல் நேரத்தில் மட்டும் கனமழையிலிருந்து சற்று ஓய்வு கிடைத்தது.

ஆனால் அன்று இரவே பல இடங்களில் மழை மீண்டும் தீவிரமடைந்தது.

இதனால் பொதுமக்கள் முழு விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்தனர்.

கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 11க்கு அதிகரித்துள்ளது.

மேலும், 6 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொல்லம், திருவனந்தபுரம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் இரவு நேர ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கைநிலை விடுக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாகப் பம்பை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பத்தனம்திட்டா மாவட்டத்திற்குத் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பம்பை ஆற்றின் கரைகளிலும் அதன் உபநதியான கக்கட்டின் கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மாநிலத்தில் 273 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 7,674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளி இரவு, சனிக்கிழமைகளில் மாநிலத்தை உலுக்கிய நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் மொத்தம் 30 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் குவிந்துள்ள சேற்றை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் படகுகள் கவிழ்ந்து மாயமான இரண்டு மீனவர்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கடலிலிருந்து மீட்கப்பட்டன.

முதலப்பொழி துறைமுகத்திற்கு அருகே காணாமல் போன அஞ்சுதெங்குவைச் சேர்ந்த ஃப்ரீமன், 28, என்பவரின் உடல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னன்துராவிலிருந்து மீட்கப்பட்டது. அதேபோல விழிஞ்சம் துறைமுகம் அருகே படகு மூழ்கியதால் பலியான கோட்டுக்கல்லைச் சேர்ந்த ஆண்டனி, 63, என்பவரின் உடல் அடிமலத்துராவிலிருந்து மீட்கப்பட்டது. முதலப்பொழியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன ஷிஜின் என்ற மற்றொரு மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலக்காடு கிழக்கஞ்சேரி அருகே உள்ள பாலக்குழி அருவிக்கு வந்த ஐந்து பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பானுப்ரியா, 40, அருவியில் விழுந்து உயிரிழந்தார்.

மலப்புரம் மஞ்சேரியில் உள்ள கரிகாட் சுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில் நீந்தியபோது ஸ்ரீஹரி என்ற 19 வயது மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தலச்சேரியில் உள்ள கைத்தேரியில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒருவர், பெருக்கெடுத்து ஓடிய நீரில் விழுந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் வி.டி. சதீசன் கேட்டுக்கொண்டார்.

எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில்குமார் கூறினார்.

அனைத்து நிவாரண முகாம்களிலும் உணவு, குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்