இணைய மோசடி: கம்போடியாவில் 36,000 இந்திய ‘சிம்’ அட்டைகள்

இணைய மோசடி: கம்போடியாவில் 36,000 இந்திய ‘சிம்’ அட்டைகள்

2 mins read
9c837749-b35a-4f06-9b4e-839a773335e9
‘சிம்’ அட்டைகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஏராளமானோரை ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. - சித்திரிப்புப் படம்: ஈடிவி

புதுடெல்லி: போலி அடையாள ஆவணங்கள் மூலம் இந்தியாவில் வாங்கப்பட்ட கைப்பேசி இணைப்புக்கான 36,000 ‘சிம்’ அட்டைகள் கம்போடியாவுக்குக் கடத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

அவற்றைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஏராளமானோரை ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்தியாவில் சாமானியர்கள் முதல் உயர் பதவியில் உள்ளவர்கள் வரை பலர் இணைய மோசடிக்காரர்களின் வலையில் சிக்குகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 5ஆம் தேதி அமலாக்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய 30 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து நீடித்த விசாரணையின்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ஏராளமான சிம் அட்டைகள் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையை அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தினர். அப்போது இந்தியாவில் வாங்கப்படும் கைப்பேசி சிம் அட்டைகள் முதலில் மலேசியாவுக்கும் பின்னர் அங்கிருந்து கம்போடியாவுக்கும் கடத்தப்பட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீது பின்னர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்திய சிம் அட்டைகளை வாங்கிய மோசடிக் கும்பல், அவற்றைக் கம்போடியாவில் இருந்தபடிப் பயன்படுத்தி, இந்தியக் குடிமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் சந்தேகத்துக்கு இடமான 2.3 லட்சம் சிம் அட்டைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றுள் 36,000 சிம் அட்டைகள் கம்போடியாவில் செயலில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 5,300 சிம் அட்டைகளைப் பயன்படுத்தி ‘வாட்ஸ் அப்’ அழைப்புகள் மூலம் இந்தியர்களை ஏமாற்றி உள்ளனர் என்றும் இந்த மோசடியில் சிம் அட்டைகளை விற்கும் முகவர்களே உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

கல்வியறிவற்ற ஏழைகள், கிராமப்புற மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பெயரில் சிம் அட்டைகளை வாங்கி கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் இடைத்தரகர் மூலம் இவ்வாறு ஏராளமான சிம் அட்டைகளைப் பெற்றது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்