புதுடெல்லி: தங்களது பெயரில் ஏற்கெனவே ஒன்பது கைப்பேசி இணைப்புகளைக் கொண்டுள்ள சந்தாதாரர்களுக்குப் புதிய ‘சிம்’ அட்டைகளை வழங்கக்கூடாது என்று தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி புதிய இணைப்புகளைப் பெற முயலும் ஒவ்வொரு சந்தாதாரரையும் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய ‘சிம்’ அட்டைகளை வழங்க மறுக்க வேண்டும். இதற்காகத் தகுந்த தொழில்நுட்ப, நிறுவன நடவடிக்கைகளை ஆகஸ்ட் 24 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்பில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தாதாரரிடம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கைப்பேசி இணைப்புகள் ஏற்கெனவே உள்ளன என்பதையும், அதனால் புதிய கைப்பேசி இணைப்பை அவருக்கு வழங்க முடியாது என்பதையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவேற்றம் செய்த சந்தாதாரர் தரவுப் பதிவுகளின் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறையால் நிறுவப்பட்ட மின்னிலக்கப் புலனாய்வுத் தளத்தைப் பயன்படுத்தும்படி அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே வரம்பைத் தாண்டி கைப்பேசி இணைப்புகளைப் பெற்றுள்ள சந்தாதாரர்களின் விவரங்கள் அத்தளத்தில் எளிதாகக் கிடைக்கின்றன.
மேலும், அனுமதிக்கப்பட்ட கைப்பேசி இணைப்பு வரம்பை ஏற்கெனவே எட்டிவிட்ட ஒவ்வொரு சந்தாதாரரின் பிரதிநிதித்துவ நிழற்படமும் ஆகஸ்ட் 23 முதல் அத்தளத்தில் கிடைக்கப்பெறும்.
இந்த நடவடிக்கையானது வரம்பைத் தாண்டி புதிய கைப்பேசி இணைப்புகளைப் பெறுவதைத் தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் இந்தச் செயல்முறையை மின்னிலக்கப் புலனாய்வுத் தளத்துடன் முழுமையாக ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்வரை, வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவ விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி ஒரு நாளில் செயல்படுத்தப்படும் எந்தவொரு கைப்பேசி இணைப்பும் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.


