டேராடூன்: துறவிகளைப் போல் வேடமிட்டு வலம்வந்த பங்ளாதேஷ் குடிமக்கள் உள்பட 14 பேரை உத்தராகண்ட் காவல்துறை கைது செய்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பங்ளாதேஷியர்கள் ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். இந்தச் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து நாடு கடத்துவதில் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதையடுத்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கள்ளக்குடியேறிகளைப் பிடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அங்கு கள்ளக்குடியேறிகள் சாமியார்களைப் போல் வேடமிட்டு நடமாடி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க ‘ஆப்பரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, கைது செய்து வருகின்றனர்.
இந்தக் கள்ளக்குடியேறிகளும் உள்ளூரைச் சேர்ந்த சிலரும் மதமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுவரை 14 போலிச் சாமியார்கள் பிடிபட்டுள்ளனர். 5,500 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையின் சட்டம் ஒழுங்குத் தலைவர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே தெரிவித்தார்.
“ஆப்பரேஷன் கலாநெமி மூலம் நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளோம். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 14 போலிச் சாமியார்களைத் தற்போது கைது செய்திருக்கிறோம்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார் நிலேஷ் ஆனந்த் பரானே.
‘கடவுளின் நிலம்’ எனக் போற்றப்படும் இடத்தில் கடவுளின் புனிதத்தன்மை கெட்டுவிடக்கூடாது என்றும் இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளை அனுமதிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் ‘ஆப்பரேஷன் கலாநேமி’ நடவடிக்கை தொடங்கியது. அப்போது முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை 4,000 பேர் விசாரிக்கப்பட்டு, 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் மூலம், இந்நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட நிலேஷ் ஆனந்த் பரானே, சந்தேகத்துக்கு இடமளிக்கும் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
ஹரித்வாரில் மட்டும் ஏறக்குறைய 2,700 பேர் விசாரிக்கப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டேராடூனில் விசாரிக்கப்பட்ட 922 பேரில், ஐந்து பேர் பிடிபட்டனர்.
“கைதானவர்களில் பங்ளாதேஷைச் சேர்ந்த அமித்குமார் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக உத்தராகண்டில் தன்னை வங்காள (பெங்காலி) மருத்துவர் என்று போலி ஆவணங்கள் மூலம் சித்திரித்து வசித்து வந்துள்ளார்.
“இதேபோல், காஷ்மீரைச் சேர்ந்த மற்றொருவர், தாம் டெல்லியில் வசிக்கும் பணக்காரர் என்று தன் பெயரையும் சமயத்தையும் மறைத்து, ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளார். அவரையும் கைது செய்துள்ளோம்,” என்றார் திரு நிலேஷ் ஆனந்த் பரானே.