‘ஆப்பரேஷன் சிந்தூர்’

2 mins read
95b0978b-f6f8-4372-9298-355a0668891e
தீவிரவாதிகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. - படம்: ஊடகம்

இந்தியாவின் தாக்குலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் அப்பட்டமான போர்ச் செயல் என்று விமர்சித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தகுந்த பதிலடி கொடுக்க எங்கள் நாட்டுக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன, பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை கூட்டாக இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம், ‘நீதி வழங்கப்பட்டது’ என்ற ஒரு வீடியோவை வெளியிட்டது.

ராணுவ அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு தளத்திலும் 25 – 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முரிட்கேவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் தகர்க்கப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியப் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கணக்கிட்டு வருகின்றன. இந்தியா டுடே ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 80 முதல் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புகளின் ஏவுதளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் தீவிரமயமாக்கல் மையங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

தாக்குதல் நடத்தப்பட்ட 9 தளங்களில் நான்கு பாகிஸ்தானுக்குள் அமைந்திருந்தன. மீதமுள்ள ஐந்து தளங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன.

இந்த நடவடிக்கையின் போது இந்தியா மேம்பட்ட, நீண்ட தூர துல்லிய ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமான வான்வழித் தாக்குதல்கள் நடத்த, SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் துல்லியமாக வழிநடத்தப்பட்ட வான்-தரையில் இருந்து தாக்கும் ஹேமர் குண்டுகள் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் கடுமையான எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்தியப் படைகளும் பதிலடி கொடுத்தன. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் படைகளின் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தாக்குதல் நடந்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்ட போதிலும், பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த ஒரு தெளிவான நடவடிக்கையும் எடுக்காததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்