புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பாக டெல்லியில் பேரணி நடத்தப்படும் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா, இந்த விவகாரம் நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்றார்.
அண்மையில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 62 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியது தேர்தல் ஆணையம்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தகுதி வாய்ந்தவர்கள் நீக்கப்பட்டு, தகுதியற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறிய புகாரைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டத்துக்கு ராகுல் காந்தி முதன் முறையாக அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தேசியத் தலைவர் கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், அகிலேஷ் யாதவ், திருச்சி சிவா, அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கமல்ஹாசன், தேஜஸ்வி யாதவ் என மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலை வரவேற்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கூட்டம் ஆக்கபூர்வமானதாக இருந்தது என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி, தேர்தல் ஆணைய செயல்பாடு, வாக்காளர் பட்டியலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து பல தலைவர்கள் கவலை தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கர்நாடகா, மகாராஷ்டிராவில் நடந்த குளறுபடிகள் குறித்து ராகுல் காந்தி விளக்கினார். பீகாரில் இன்று நடந்தது, நாளை நாடு முழுவதும் நடக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். இது கவலை அளிக்கிறது,” என்றார் டி.ராஜா.
இதையடுத்து, இண்டியா கூட்டணி சார்பாக, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் பங்கேற்கும் பேரணி நடக்கும் என்று குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற வளாகத்தில் அனைவரும் கூடி, அங்கிருந்து பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, காலம் மாறும்போது தவறு செய்தவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என தமது எக்ஸ் தளப் பதிவு ஒன்றில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.