எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க இந்தியத் தலைமை நீதிபதி மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க இந்தியத் தலைமை நீதிபதி மறுப்பு

படம்: தினமலர்

12 Oct 2026 - 6:54 pm

2 mins read

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டபடி பேரணி நடத்தின.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க எதிர்க்கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர்.

இதுகுறித்து தலைமை நீதிபதிக்கு மின்னஞ்சல் வழி கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், வாக்குத் திருட்டு தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே நீதிமன்றப் பரிசீலனையில் இருப்பதால், அது குறித்து நேரில் சந்தித்துப் பேசுவது பொருத்தமானதாக இருக்காது என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டப்படி நிர்வாகத் துறையின் பணிகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

உச்ச நீதிமன்றம் நோக்கி எதிர்க்கட்சிகளின் பேரணி

இதனிடையே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலகக் கோரி ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டனர்.

உச்ச நீதிமன்றம் நோக்கிப் புறப்பட்ட இந்தப் பேரணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஜனநாயகத்தையும் மக்களின் வாக்கு உரிமையையும் காப்பாற்றவே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் தலைநகரான டெல்லி, சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

டெல்லிக்குள் மக்கள் நுழைய முடியாதவாறு ரயில்களும் பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

டெல்லி முழுவதும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரும் விரைவு அதிரடிப் படையினரும் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளர்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்குத் தடை

இதனிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த டெல்லி காவல்துறை தடைவிதித்து, மூன்று மாற்று இடங்களை ஒதுக்கியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமாகத் திகழும் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி எந்தவிதமான போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்த முடியாது என இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்