புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இம்முறை நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பின்னரும் எதிர்க்கட்சிகளின் அமளி முடிவுக்கு வந்தபாடில்லை.
இதையடுத்து. வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டால் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை, பத்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை திங்கட்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்போவதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.
எனினும், திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
‘டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியாகப் போராடிய மாணவர்கள்மீது தடியடி நடத்தியது ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அவை நடவடிக்கைகள் திங்கட்கிழமை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
முன்னதாக, கடும் அமளிக்கு மத்தியிலும் பொதுத்தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடு முழுவதும் மாணவர்கள் எழுப்பிய கவலைகளை கருத்தில்கொண்டு புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமர் எடுத்துள்ள முக்கியமான முடிவை எதிர்க்கட்சியினர் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

