சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) டெல்லி சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களான ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகியோரைச் சந்தித்தது, எடப்பாடி பழனிசாமியின் (ஈபிஎஸ்) தலைமையில் இயங்கும் அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மீண்டும் அதிமுக கட்சிக்குள் தங்களை இணைக்க வேண்டும்; அப்படியில்லை என்றால், அது ‘தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக’ மாற்றப்பட்டு, 15ஆம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும். தங்கள் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென பாஜக மேலிட அழைப்பின் பேரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் செவ்வாய்க்கிழமை இரவு (டிசம்பர் 2) புது டெல்லியில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தரப்பை கதிகலங்கச் செய்துள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், “வேறு வழியில்லாமல்தான் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவைக் கட்சியாக மாற்ற முடிவுசெய்தார் ஓபிஎஸ். அதன்மூலம், திமுக, தவெக என யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் அவரின் திட்டமாக இருந்தது. ஆனால், அவர் இதற்கு முழு மனதாகத் தயாராகவில்லை.
“இந்நிலையில், எதிர்பாராத விதமாக டெல்லி பாஜக தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்திரநாத், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சென்றுள்ளார் ஓபிஎஸ்,” என்று கூறினர்.
இதற்கிடையில் டெல்லி சென்ற ஓபிஎஸ், பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
சந்திப்பின்போது ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமியால் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லை. கட்சியையும் கட்டுக்கோப்பாக நிர்வகிக்க முடியவில்லை. பலர் அதிமுகவில் இருந்து திமுகவை நோக்கி நகர்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“தவெகவுக்கு செல்ல 35 மாவட்டச் செயலாளர்கள் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால் நிச்சயமாக 3ஆம் இடத்திற்கு அதிமுக கூட்டணி தள்ளப்படும்.
“அதிமுகவை ஒருங்கிணைத்துக் களம் கண்டால் மட்டுமே இழந்த செல்வாக்கை மீட்க முடியும். மாற்றுக் கட்சிகளுக்கு செல்வோரைத் தடுத்து, இருப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்,” எனக் கூறி இருக்கிறார்.
பாஜகவும் அதிமுக விவகாரத்தில் முழு மூச்சாக கவனம் செலுத்த ஆயத்தமாகி வருகிறது. ஆகையால், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பயணத்தினால் பல மாற்றங்கள் அதிமுகவில் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

