புதுடெல்லி: நாடு முழுவதும் பணியில் உள்ள இந்தியக் குடிமைப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்களது அசையாச் சொத்து வருமானத்தைத் தாக்கல் செய்யாமல் இருப்பது கடுமையான குறைபாடாகக் கருதப்படும் என்று மத்திய பணியாளர் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து விவரக் கணக்கைத் தாக்கல் செய்வதுடன், பதவி உயர்வுகளை நேரடியாக இணைக்கும் நிதிகளையும் அரசாங்கம் திருத்தியுள்ளது.
குறித்த நேரத்தில் அசையாச் சொத்து வருமானத்தை அளிக்கத் தவறும் அதிகாரிகள், அடுத்தகட்ட ஊதிய உயர்வைக் பெற பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அமைச்சு எச்சரித்துள்ளது.
மத்திய அரசுத் துறை செயலாளர்களும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் தங்களின்கீழ் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தக் காலக்கெடுவை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசு மேலும் வலியுறுத்தி உள்ளது.

