தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க உத்தரவு

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க உத்தரவு

2 mins read
09ba6629-34df-40fa-96ba-136483f4c7cb
இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். - படம்: என்டிடிவி

லக்னோ: லக்னோவில் 15 பேரின் உயிரைக் காவு வாங்கிய தீவிபத்தின் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்து நிகழ்ந்த கட்டடத்தை இடிக்க கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

வடக்கு லக்னோவின் மேதா மார்க் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்ட பின்னர், அதிலிருந்த பெரும்பாலானோர் இரண்டாவது மாடியில் சிக்கிக்கொள்ள நேரிட்டது.

இந்தக் கோர விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த மூன்று மாடி வணிகக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டு அதிகாரிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பே அதை இடிக்க உத்தரவிட்டிருந்தனர். எனினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு திங்கட்கிழமை (ஜூன் 21) இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த உத்தரவு என்ன காரணத்தால் மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையை, இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடத்தை அவர் திங்கட்கிழமை (ஜுன் 22) நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக லக்னோ தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தமது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டிருந்தார் திரு ராஜ்நாத் சிங்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

விபத்து குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு ஒரு வாரத்துக்குள் தனது அறிக்கையை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்