வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் எதிர்காலப் பங்குதாரர்கள்: ஜெய்சங்கர்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் எதிர்காலப் பங்குதாரர்கள்: ஜெய்சங்கர்

படம்: எஸ். ஜெய்சங்கர், எக்ஸ் தளம்

12 Nov 2026 - 1:28 pm

2 mins read

கோல்கத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவின் கடந்த காலத்துடன் மட்டுமன்றி, அதன் நிகழ்காலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் எதிர்காலத்தின் முக்கியப் பங்குதாரர்களாகவும் திகழ்கின்றனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி 1915 ஜனவரி 9ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதை நினைவுகூரும் 19வது ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 7 முதல் 9 வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க மாநில அரசுடன் இணைந்து நடத்தப்படும் அம்மாநாட்டிற்கான இணையத்தளத்தை அமைச்சர் ஜெய்சங்கரும் அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும் புதன்கிழமை (நவம்பர் 11) தொடங்கிவைத்தனர்.

“கோல்கத்தா வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். இங்கிருந்துதான் பலர் மொரிஷியஸ், பிஜி, கரீபியன் தீவுகளுக்குக் கடல் கடந்து சென்று மொழி, பண்பாடு, நம்பிக்கைகளைப் பரப்பினர்,“ என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.

“துணிச்சல், சாதனைகளின் அடையாளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாங்கள் வாழும் நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு, தாய்நாட்டுடனான பிணைப்பையும் பேணுகின்றனர். இதன் மூலம் இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையே ‘வாழும் பாலமாக’ அவர்கள் செயல்பட்டு, அறிவு, புத்தாக்கம், பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றனர்,” என்றார் அவர்.

‘வேர்களை நோக்கித் திரும்புதல்: பாரதத்துடனான புலம்பெயர்ந்தோரின் பிணைப்பைப் புதுப்பித்தல்’ எனும் கருப்பொருளில் அமையும் இம்மாநாட்டில், இளைய தலைமுறையினருக்காக ‘பாரத்வர்ஸ்’ (Bharatverse) எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

2047ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ந்த பாரதம்’ எனும் இலக்கை அடைய வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியம் என்று திரு ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் அதிபர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதுகளை வழங்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்