இந்தியாவைக் கடல்வழித் தாக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம்

இந்தியாவைக் கடல்வழித் தாக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

07 Nov 2026 - 6:06 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவைக் கடல்வழியாகக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கராச்சிக்கு அருகில் உள்ள சார்னா தீவுப் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான ‘லஷ்கர் தாவா’ அமைப்பினர் இந்த நாசவேலைக்குத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளைப் போல் மாறுவேடமிட்டு அங்கு வந்துள்ள அவர்கள், ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலடியில் நீந்தும் உத்திகள், நீருக்கடியில் சண்டையிடும் முறைகள், நவீன கடல்சார் தாக்குதல் பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய அரசை அதன் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மங்க்லா அணைப் பகுதியிலும் அவர்கள் இதேபோன்ற பயிற்சிகளைப் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகர் மீது கடல்வழியாக ஊடுருவி நடத்திய கோரத் தாக்குதலைப் போன்று தற்போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தாக்குதலை அரங்கேற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படைகளும் கடற்படையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடலோரக் கண்காணிப்புகள் பன்மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் எந்தவொரு சதித்திட்டத்தையும் முறியடிக்க நமது ராணுவம் முழுத் தயார்நிலையில் உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்