புதுடெல்லி: அண்மையில் வெளியான துரந்தர் படம் வசூலில் ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் துரந்தர். இதில் சில உண்மைச் சம்பவங்களும் உள்ளன.
கதாநாயகன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி அருகேயுள்ள லியாரி பகுதியில் இந்தியாவுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்குள் ஊடுருவி உளவு நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
இந்நிலையில், லியாரி பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் பலகோடி வருவாயை ஈட்டியுள்ளதால், இதில் 80 விழுக்காட்டு வருவாயை லியாரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்த காணொளியும் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
லியாரி பகுதி மக்கள் அளித்துள்ள பேட்டியில், “லியாரி பகுதியை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் லியாரி பகுதி மக்கள் பயனடைய வேண்டும். இப்பகுதியில் உள்ள மோசமான சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த, துரந்தர் படத்தின் லாபத்தை வழங்க வேண்டும்” என கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் லியாரி பகுதி மக்களின் கோரிக்கை குறித்து ‘துரந்தர்’ படத்தின் இயக்குநர் ஆதித்யா தர் மற்றும் தயாரிப்பாளர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

