தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பான் பான் பான்’: எச்சரிக்கை சமிஞ்சை விடுத்த இண்டிகோ விமானி

2 mins read
53d99214-c490-4f7b-a0ac-2468c1edc414
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானம் புதன்கிழமை (ஜூலை 16) இரவு, டெல்லியில் இருந்து கோவா நோக்கிப் புறப்பட்டது. அதில் 191 பயணிகள் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, விமானி உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டார்.

அதற்கு அவர், ‘பான் பான் பான்’ (PAN PAN PAN) என்ற அவசரகால நிலையைக் குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்த சமிஞ்சையானது, அனைத்துலக அளவில் விமானிகள் பயன்படுத்தக்கூடிய ஒன்று.

‘மே டே’ (MAY DAY) என்பது, உயிர்பிழைக்க வேறு வழி இல்லாத நிலையில், விமானிகள் தெரிவிக்கும் எச்சரிக்கை சமிஞ்சை எனில், ‘பான் பான் பான்’ என்பது, அதற்கு முந்திய நிலையில் விடுக்கும் எச்சரிக்கையாகும்.

அதாவது, உயிருக்கு உடனடியாக ஆபத்தற்ற, எனினும் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சினை குறித்த எச்சரிக்கை விடுக்க பயன்படுத்தப்படும், அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை இது.

இண்டிகோ விமானத்தில் இருந்து கிடைத்த எச்சரிக்கையை அடுத்து, அந்த விமானத்தை உடனடியாக மும்பை சத்ரபதி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவசர மருத்துவ வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.

எனினும், விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினார் விமானி. இந்தச் சம்பவத்துக்கு தொழில்நுட்பக் கோளாறுதான் முக்கியக் காரணம் என இண்டிகோ விமானம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்