நியூயார்க்: காலிஸ்தான் அமைப்பான ‘சீக்கியர்களுக்கு நீதி’ (Sikhs For Justice) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவுக்கு (54) 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.
வரும் 20ஆம் தேதி இந்த வழக்கில் இறுதித் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நிகில் குப்தா தரப்பு வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதியிடம் உருக்கமான மன்னிப்புக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதில், தண்டனைக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னடத்தைத் துறையின் பரிந்துரையையும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும் கருத்தில்கொண்டு இந்தச் சலுகையை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு செக் குடியரசின் பிராக் நகரிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட நிகில் குப்தா, தற்போது புரூக்ளின் தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது, சதித் திட்டம் தீட்டியது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
தனது மன்னிப்புக் கடிதத்தில், தனிப்பட்ட வழக்குகளை முடித்து வைப்பதாக ஒருவர் அளித்த வாக்குறுதியால் ஏமாற்றப்பட்டு, தவறான வழிகாட்டுதலால் இந்தச் சதியில் சிக்கியதாக நிகில் குப்தா தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்நிய மண்ணில் ஒரு கொலையைத் திட்டமிட்டது மிகவும் துணிகரமான, கடுமையான குற்றம் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கச் சட்ட விதிகளின்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், சிறையில் நன்னடத்தையுடன் செயல்படும் பட்சத்தில் தண்டனைக் காலத்தில் 15 விழுக்காடு வரை (ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்) குறைப்புப் பெற குப்தாவுக்கு வாய்ப்புள்ளது.
இருப்பினும், அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அவருக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
