உக்ரேன் குண்டுவெடிப்பில் பலியான மருத்துவ மாணவருக்கு கோவில் கட்டிய பெற்றோர்

உக்ரேன் குண்டுவெடிப்பில் பலியான மருத்துவ மாணவருக்கு கோவில் கட்டிய பெற்றோர்

2 mins read
51407aec-d3c1-4e21-9ef5-45da8091f30a
மாணவர் நவீன். - படம்: ஊடகம்

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். சேகரப்பா, விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர், உக்ரேனில் மருத்துவம் படித்து வந்தார்.

இவர் மருத்துவப் படிப்பை முடிக்க ஆறு மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், உக்ரேன், ரஷ்யா இடையே போர் வெடித்தது.

இதனால் உக்ரேனில் இருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர். அவர்களில் நவீனும் ஒருவர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, சில பொருள்களை வாங்க மறைவிடத்தில் இருந்து வெளியே சென்றபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்தார். அன்றைய தினம் சிவராத்திரியாகும்.

நவீனின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினர் அவரது பெற்றோர்.

இந்நிலையில், மகன் நவீன் நினைவாக, தங்களது சொந்த ஊரான சலகேரி கிராமத்தில் சிவன் கோவில் ஒன்றை அவரது பெற்றோர் கட்டியுள்ளனர்.

நாளை (பிப்ரவரி 26ஆம் தேதி) சிவராத்திரியை முன்னிட்டு, இந்தக் கோவிலில் சிறப்புப் பூசைகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் மகன் ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவராகத் திரும்புவார் எனக் காத்திருந்தோம். ஆனால், உயிரற்ற சடலமாகத் திரும்பி வந்தார்.

“சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே நவீனின் கனவு. மருத்துவமனை கட்டும் அளவுக்கு வசதி இல்லாததால் கோவில் கட்டியுள்ளோம். அதனால் சற்று ஆறுதலாக உள்ளது,” என்று நவீனின் பெற்றோர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நவீனின் நினைவு தினம் வருவதை அடுத்து, அவரது நண்பர்கள் சமூக ஊடகங்களில் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

“நவீன் தன்னுடன் படித்த மற்ற மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவர் உயிரிழந்ததற்கு அதுவும் காரணமாகிவிட்டது.

“மற்றவர்களுக்காகவும் உணவு வாங்க வெளியே சென்ற போதுதான் அவர் உயிரிழிக்க நேரிட்டது,” என்று ஒரு நண்பர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்