மும்பை: புதிய வாகனங்கள் வாங்கும்போது, அவற்றை நிறுத்தும் இடத்துக்கான சான்றிதழ் இல்லாவிட்டால், அந்தக் கார்களைப் பதிவு செய்ய இயலாது என மகாராஷ்டிர அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனப் பெருக்கத்தால் அவற்றை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நான்கு சக்கர மற்றும் அதற்கும் அதிகமான சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் நெருக்கடி நிலவுவதால், ஒருங்கிணைந்த வாகன நிறுத்தக் கொள்கையைச் செயல்படுத்தும் விதமாக, அம்மாநில அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, நகராட்சி ஆணையர்களுடன் போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆலோசனை நடத்தினார்.
“வாகன நிறுத்துமிடங்களை நிர்மாணிக்க திட்டமிட்டு உள்ளோம். ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள், வாகன நிறுத்தத்துடன் கூடிய மனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
“அவற்றை வாங்குபவர்களும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையிடம் இருந்து வாகன நிறுத்த இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழைப் பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாது,” என்று அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறியுள்ளார்.