புதுடெல்லி: இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில், வாகனம் நிறுத்துவது தொடர்பில் தகராறு மூண்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை அவருடைய அண்டைவீட்டார் சுட்டுக்கொன்றார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) இரவு இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் பரம்ஜித் தங்கர் என அடையாளம் காணப்பட்டார். ஹிசார் பகுதியைச் சேர்ந்த இவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவிருந்த சகோதரி மகனின் திருமணத்திற்காக, துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் இவர் இந்தியா சென்றார்.
சூரஜ்குண்ட் காவல் நிலைய அதிகாரி பிரஹலாத் குமார் தெரிவித்த தகவலின்படி, வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து தங்கர் வீடு திரும்பினார். அப்போது, அதே குடியிருப்புக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் வசித்து வந்த மோகன் என்ற மோனு சர்மாவுடன் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது.
641ஆம் எண் கொண்ட வீட்டின் முதல் தளத்தில் தங்கர் தம்முடைய மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.
வாக்குவாதத்தின்போது சர்மா, உரிமம் பெற்ற துப்பாக்கியால் 15 முதல் 16 முறை சுட்டதாகவும் அவற்றில் எட்டு முதல் ஒன்பது குண்டுகள் தங்கர்மீது பாய்ந்ததாகவும் காவல்துறை கூறியது. துப்பாக்கிச்சூட்டிற்குப் பின் சர்மா தம் குடும்பத்தினருடன் சேர்ந்து தப்பியோடிவிட்டார். சனிக்கிழமை காலை வரை அவர் பிடிபடவில்லை.
இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஐந்து நாள்களுக்கு முன்பு நாய் தொடர்பான தகராற்றில் தங்கரின் மகனை சர்மா தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலுக்கான பின்னணி குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காவல்துறையினர், குற்றப்பிரிவு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தைச் சோதனையிட்டு காலித் தோட்டா உறைகளைக் கைப்பற்றினர்.
தங்கரின் உடல் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. காயங்கள், சுடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெளிவாகத் தெரியும் என்று கூறப்பட்டது. தலைமறைவாக உள்ள சர்மாவைக் காவல்துறை தேடி வருகிறது.
