புதுடெல்லி: இந்தியாவின் பெங்களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் IX-1086 விமானம், நேற்று [Ϟ](செப்டம்பர் 22) காலை 8 மணிக்குப் புறப்பட்டது. விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவர் விமானியறையை நெருங்கிக் கதவைத் திறக்க முற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஒருவர் விமானியறைக் கதவைத் திறக்க வேண்டுமென்றால் மறை எண்ணைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு, விமானி அவரை அனுமதிக்கவும் முடியும், மறுக்கவும் முடியும். ஆண் பயணியால் கதவைத் திறக்க முடியவில்லை. சிப்பந்திகள் அவர் இருக்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்தனர்.
எதற்காக அவர் விமானியறைக்குள் நுழைய முயன்றார் என்பது இன்னும் தெரியவில்லை. அவர் வேறு எழுவருடன் பயணம் செய்தார்.
விமானம் வாரணாசியில் இறங்கியதும் போக்கிரிச் செயலில் ஈடுபட்ட பயணி, மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்தப் பயணியின் பயணப் பெட்டிகளையும் அவரோடு சென்றவர்களின் உடைமைகளையும் சோதனை செய்ததாகப் பாதுகாப்புப் படை கூறியது.
சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. தனது கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் எவையும் மீறப்படவில்லை என்று நிறுவனம் அதில் குறிப்பிட்டது.
தற்போது சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.