கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள டிகாரு ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மிசோரம் மாநிலத்தின் சைராங்கில் இருந்து கோல்கத்தா நோக்கிச் சென்ற அந்த விரைவு ரயிலின் என்ஜின் உள்ளிட்ட ஆறு பெட்டிகள் புதன்கிழமை (நவம்பர் 11) காலை 6.54 மணியளவில் தண்டவாளத்தை விட்டு விலகின.
கௌஹாத்திக்கு அருகிலுள்ள காம்ரூப் மாவட்டத்தில் டிகாரு நிலையம் அருகே அந்த விபத்து நடந்தது. அந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்களில் நால்வருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த ரயில்வே துறை அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டனர்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்தது.
பயணிகள் மாற்று ரயில் மூலமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.
விபத்து நடப்பதற்குச் சில நொடிகளுக்கு முன்னதாக என்ஜின் அறையிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
ரயிலின் வேகத்தைக் குறைக்க உதவும் அமைப்பு வேலை செய்யவில்லை என்றும் சிவப்பு சமிக்ஞை காட்டப்பட்டும் ரயிலை நிறுத்த முடியவில்லை என்றும் ஓட்டுநர் பதற்றத்துடன் தெரிவிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
சில நொடிகளில் பலத்த சத்தத்துடன் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், தொழில்நுட்பக் கோளாறு குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
