தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுஏஇ-இந்தியா இடையே பயணிகள் கப்பல் இயக்க முயற்சி

2 mins read
98bf756a-5e13-48be-ad96-d3f384c9352b
மாதிரிப்படம்: - பிக்சபே

துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) இந்தியாவிற்கும் இடையே பயணிகள் கப்பல் இயக்கப்படுவது சாத்தியமாகலாம்.

அக்கப்பல்மூலம் யுஏஇயிலிருந்து மூன்று நாள்களில் கேரளத்திற்குச் சென்றுவிடலாம் என்று ஷார்ஜா இந்தியர் சங்கத் தலைவர் ஒய்.ஏ.ரஹீம் சொன்னதாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“டிசம்பரில் பள்ளி விடுமுறை தொடங்குமுன் கப்பலை இயக்க திட்டமுள்ளது. இங்கு வாழும் இந்தியர்கள் அதிகப்படியான கட்டணம் செலுத்தாமல், கட்டுப்படியான விலையில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று திரு ரஹீம் கூறினார்.

இத்திட்டம் தொடர்பில் கேரள அரசாங்கப் பேராளர்கள் இம்மாதம் 24ஆம் தேதி இந்திய அமைச்சர்களைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

“இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலே இப்போது எங்களுக்குத் தேவை,” என்றார் திரு ரஹீம்.

அப்படி ஒப்புதல் கிடைத்துவிட்டால், இவ்வாண்டு நவம்பர் மாதமே கப்பலின் சோதனையோட்டம் இடம்பெறலாம் என்றும் அவர் சொன்னார்.

கப்பலில் பயணம் செய்ய ஒருவர் ஒருவர் 442 திர்ஹம் (S$164, ரூ.10,000) முதல் 663 திர்ஹம் (S$246, ரூ.15,000) வரை செலுத்த வேண்டியிருக்கலாம். ஒருவர் 200 கிலோவரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படலாம். கப்பலில் பலவகைப்பட்ட உணவு வழங்கப்படலாம்; கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கலாம்.

இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால், கேரளாவின் கொச்சி, பேப்பூர் நகரங்களுக்குக் கப்பல் இயக்கப்படலாம். அத்துடன், கேரளத்தின் விழிஞ்சம் துறைமுகத்திற்கும் கப்பலை இயக்கத் திட்டமுள்ளதாகத் திரு ரஹீம் கூறினார்.

முன்னதாக, வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் விடுமுறைக் காலங்களில் தங்களின் சொந்த ஊர் திரும்புவதைச் சாதகமாக்கிக்கொண்டு, விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பயணச்சீட்டு விலையை உயர்த்தி விற்பதாகக் கடந்த மே மாதம் கேரளத் துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்