கொச்சி: பேருந்துப் பயணத்தின்போது வாக்குவாதம் முற்றியதால், பயணி ஒருவர் மதுப்புட்டியால் பேருந்து நடத்துநரின் வயிற்றில் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் உயர் நீதிமன்றம் - பூந்தோட்டம் வழித்தடத்தில் வேளாங்கண்ணி மாதா என்ற தனியார் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 5) பிற்பகலில் அப்பேருந்தில் வினூப், 34, என்ற ஆடவர் பயணம் செய்தார். அப்போது, பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மற்ற பயணிகளுக்கு இடந்தரும் வகையில், சற்று நகர்ந்து முன்னால் செல்லும்படி வினூப்பிடம் கூறினார் பேருந்து நடத்துநரான ஜெயின் ஜேம்ஸ்.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் வெடித்தது. அப்போது, வினூப் நடத்துநர் ஜெயினின் கையைக் கடித்ததாகக் கூறப்பட்டது.
பேருந்தைவிட்டு இறங்கியபின், வினூப் உடைந்த பீர் போத்தலால் ஜெயினின் வயிற்றில் குத்தியதாகச் சொல்லப்படுகிறது.
உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயின், பின்னர் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குற்றப் பின்னணியுடைய வினூப்பைக் காவல்துறை கைதுசெய்தது.