பாட்னா: பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை தரை இறங்கிய இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணிகளின் பெட்டிகளைச் சுமந்த வராததால் அந்த விமான நிலையத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து ஒரு விமானமும் பெங்களூரில் இருந்து மற்றொரு விமானமும் அடுத்தடுத்து தரை இறங்கின.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி, அறிவிக்கப்பட்ட பயணப் பெட்டி வளையம் அருகே வந்து காத்திருந்தனர்.
வெகுநேரமாகியும் தங்களது உடைமைகளைக் கொண்ட பெட்டி வராததால் பயணிகள் அதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
அந்த அதிகாரிகள் தெளிவான பதிலைத் தராததால் பயணிகள் ஆத்திரமுற்று கத்தினர். அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஏர் இந்தியா அதிகாரிகளும் பாதுகாப்பு அலுவலர்களும் ஈடுபட்டனர்.
வேறு உள்நாட்டு விமானம் வழியாக பயணமாறுதல் செய்ய வேண்டியவர்கள் பயணப் பெட்டிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருந்ததால் பயணங்களை மாற்றுவதிலும் ரத்து செய்வதிலும் தீவிரம் காட்டினர்.
“பொறுமை இழந்த பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தைவிட்டு இறங்கி வெகுநேரமாகியும் என்னுடைய உடைமைகள் வரவில்லை.
“வேறு ஊருக்குச் சென்று திருமணத்தில் நான் கலந்துகொள்ள வேண்டும். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்றார்.