புதுடெல்லி: உள்ளூர் விமானத்திற்குள் இரண்டு பயணிகள் ரகளை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு திங்கட்கிழமை (ஜூலை 14) ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்படத் தயாரானது.
பயணிகள் அனைவரும் அமர்ந்துவிட்ட நிலையில், விமானம் ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபோது இரண்டு பெண் பயணிகள் திடீரென்று உரக்க சத்தம்போடத் தொடங்கினர்.
அத்துடன், ‘காக்பிட்’ அறை என்று சொல்லப்படக் கூடிய விமானியின் அறைக் கதவை அவர்கள் தட்டி அந்த அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
இரு பெண்களையும் தங்களது இருக்கையில் அமருமாறு விமானப் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டபோதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.
அதனால் இதர பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. வேறு வழியின்றி விமானத்தை புறப்பட்ட இடத்துக்கே விமானி கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் (சிஆர்பிஎஃப்) பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்து வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணிகள் இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, பயணிகளின் ரகளை காரணமாக பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் இரவு 7.21 மணிக்கு, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றதாகவும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.