புதுடெல்லி: டெல்லி - ஒடிசா புருசோத்தம் விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் சிலர் படுக்கை விரிப்பு, கம்பளிப் போர்வை ஆகியவற்றை தங்கள் பைகளில் எடுத்துச் சென்று சிக்கினர்.
தொலைதூர ரயிலில்களில் தூங்கும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்குப் படுக்கை விரிப்புகள், கம்பளிப் போர்வைகள் ஆகியவை வழங்கப்படும்.
இரவில் தூங்கும்போது பயன்படுத்தியபின், பயணிகள் அவற்றைத் தங்கள் இருக்கையில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
பூரியிலிருந்து டெல்லிக்குச் செல்லும் புருசோத்தம் விரைவு ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் பயணம் செய்தனர்.
அவர்கள் டெல்லியில் இறங்கும்போது தங்களுக்கு வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகளையும் கம்பளிப் போர்வைகளையும் மடித்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் வைத்துள்ளனர்.
இதைப் பார்த்த ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் உதவியாளர், அந்தப் பயணிகளிடம் படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளியை இதுபோல் திருடுவது நியாயமா எனக் கேட்டுள்ளனர்.
அவற்றைத் திருப்பிக் கொடுங்கள் அல்லது ரூ.780 அபராதம் செலுத்துங்கள் எனக் கூறியுள்ளனர்.
அப்போது அந்தப் பயணிகளில் ஒருவர், தனது தாய் தவறுதலாகப் படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்துவிட்டார் எனக் கூறி சமாளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைப் பயணச்சீட்டு பரிசோதகரும் ரயில்வே உதவியாளரும் எச்சரித்து அனுப்பினர்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது. காணொளியைப் பார்த்த பலர், “ரயிலின் முதல் வகுப்பில் பயணம் செய்வது பெருமையான விஷயம்.
“ஆனால், அதில் பயணம் செய்பவர்கள் திருடுவது மிகவும் கீழ்த்தரமான செயல்,” என விமர்சித்தனர்.