மும்பைப் புறநகர் ரயில் பயணம்: கடந்த 20 ஆண்டுகளாக அன்றாடம் 7 பேர் உயிரிழப்பு

2 mins read
c2b41891-4646-4a1d-90ed-7222fb776e7d
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக அளவில் பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையானது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆபத்தானதாக முடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ரயிலைப் பிடித்து வேலைக்குச் செல்ல பயணிகள் அவசர அவசரமாகப் புறப்படுவதால் ரயில்களில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தில் ஏற்படும் பிற விபத்துகளால் அவர்கள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

பயணிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்பிரச்சினையை மிக தீவிரமான பிரச்சினையாகக் கருதி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, யத்தின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 2023ல் 2,590 பயணிகள் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தனர்; ஒவ்வொரு நாளும் ஏழு பேர் பலியாகின்றனர். இதே காலகட்டத்தில் 2,441 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 1,650 பேரும், மேற்கு ரயில்வே பிரிவில் 940 பேரும் உயிரிழந்துள்ளனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மும்பையின் நிலைமையைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. இவ்விஷயத்தில் மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எதையும் செய்ய முடியாது என்று கூறக்கூடாது.

“ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள். இவ்வாறு பயணிகள் பயணிக்க நிர்பந்திக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மேற்கு மற்றும் மத்திய ரயில்வேயின் பொது மேலாளர்கள், இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மும்பையின் புறநகர் ரயில்களில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோரும், தினசரி 7 பேரும் உயிரிழப்பதாக மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது மற்றும் ரயில் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவை அதிக இறப்பு எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மற்ற காரணங்களாக, மழைக்காலங்களில் நீர் தேங்குவது, தண்டவாளங்களில் குப்பைத் தீப்பிடிப்பது, தண்டவாள மேடைகள், ரயில் படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் ஆகியவை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்