இந்தியா முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதி

இந்தியா முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதி

2 mins read
77be4787-8eec-4c56-a1a3-acdf05c47272
இணையம் வழி நடைபெறும் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதே மருந்தக உரிமையாளர்களின் முதன்மைக் கோரிக்கையாகும். - கோப்புப் படம்: செய்திப்புனல்

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, புதன்கிழமை (மே 20) இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியா முழுவதும் 12.40 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்ற மருந்தகங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 42,000 ஆகும்.

இந்நிலையில் புதன்கிழமை நடந்த போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டன இதனால் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டது.

இணையம் வழி நடைபெறும் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை இணையம் மூலம் வாங்கி போதைக்கு அடிமையாகும். இளையர்களைக் காக்க வேண்டும் என்பது மருந்தக உரிமையாளர்களின் முதன்மைக் கோரிக்கையாகும்.

பல்வேறு உயிர்காக்கும் மருந்தகங்களை முறையற்ற லாப அடிப்படையில் விற்பது, அதிக தள்ளுபடி அளிப்பது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இணையம் வழி போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதையும் இணையத்தில் விற்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், கலாசார சீரழிவை தடுக்கவும் இந்திய மருந்தாளுநர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு புதன்கிழமை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை வேலை நிறுத்தம் நடைபெற்றது.

கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, நோயாளிகளுக்கான அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெரும்பாலான மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இயங்கி வரும் மருந்தகங்கள் தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் முதல்வர் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

முன்னதாக வேலை நிறுத்தத்தின் போது, ​​மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

வேலை நிறுத்தம் காரணமாக ஏராளமான நோயாளிகள் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய மருந்துகள் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாயினர்.

குறிப்புச் சொற்கள்