இம்பால்: மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மாலை வேளையில் சாலையில் இறங்கி நூதனப் போராட்டம் நடத்தினர்.
அம்மாநிலத்தில் தொடர்ந்து நடந்துவரும் கொலைகள், நீடிக்கும் இனப்பூசல், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் தவறியது ஆகியவற்றைக் கண்டித்து ஒருங்கிணைந்த ஓசை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இம்பாலில் உள்ள அம்மாநில ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். மேலும், அங்கு திரண்ட பெருங்கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
‘ஹாவோமி’ என்ற சமூக அமைப்பின் அறைகூவலை ஏற்று, மணிப்பூரில் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் உள்ள மக்கள் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை அப்போராட்டத்தை நடத்தினர்.
பாத்திரங்களைத் தட்டி ஓசை எழுப்புதல், மேளங்களை முழக்குதல், வாகனங்களின் ஒலிப்பான்கள், அபாய எச்சரிக்கை ஒலிகளை ஒலிக்கவிடுவது போன்றவற்றுடன் அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
ஏறத்தாழ 30 நிமிடங்களுக்குப் பள்ளத்தாக்கு முழுவதிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பேரொலி எதிரொலித்தது. தொடரும் வன்முறை, முடிவுக்கு வராத நெருக்கடிநிலை ஆகியவற்றின் மீதான தங்கள் சீற்றத்தை மக்கள் இவ்வாறு வெளிப்படுத்தினர்.
