தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறுவடை பண்டிகையான மாக் பிஹுவை கோலாகலமாகக் கொண்டாடிய அசாம் மக்கள்

2 mins read
fd0ac96c-60c3-4203-8018-3c64c699c52d
மாக் பிஹு கொண்டாட்டத்தின் போது சொக்கப்பனை போல் கொளுத்திவிட்டு வணங்கும் காட்சி. - படம்: ஏஎன்ஐ

கௌகாத்தி: ஆண்டுதோறும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான மாக் பிஹுவை அசாம் மக்கள் செவ்வாய்க்கிழமை அன்று (ஜனவரி 14) மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அசாமிய மக்களில் 70 விழுக்காட்டினர் விவசாயிகள். மாக் பிஹு விழாவின்போது அனைவரும் ஒன்றாக இணைந்து மெஜி (Meji) என்ற நெருப்பை ஏற்றி கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக அங்குள்ள ஜோர்ஹாட் பகுதியில் வசிக்கும் நிருபென் ராஜ்கோவா என்பவர் ஏஎன்ஐ ஊடகத்திடம் தெரிவித்தார்.

“இந்தச் சடங்குகள் எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவை.

“பொதுவாக விறகு, பச்சை மூங்கில், வைக்கோல் மற்றும் உலர்ந்த வாழை இலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டப்படுகிறது.

“இந்த நிகழ்வில், இளைஞர்கள் பெரியவர்களிடமிருந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.

“குடும்பங்களுக்குள் மரியாதையையும் அன்பின் பிணைப்பையும் வலுப்படுத்துவார்கள்.

“மாநிலம் முழுவதும் எருமைச் சண்டை, சேவல் சண்டை, முட்டை உடைக்கும் போட்டி, தெகேலி பங்கா (பானை உடைத்தல்), இசையை ஓடவிட்டு நாற்காலிகளைச் சுற்றுவது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன,” என்று ராஜ்கோவா கூறினார்.

இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காகக் கூடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காக லட்டுகள், பல பாரம்பரிய உணவுகள், அரிசியில் தயாரிக்கப்படும் பல்வேறு சுவையான உணவுகளை மக்கள் தயார் செய்கிறார்கள்.

ஜோர்ஹாட்டில் வசிக்கும் அஜோய் சந்திர போர்டோலோய் கூறுகையில், “நாங்கள் 351 ஆண்டுகளாக மாக் பிஹுவைக் கொண்டாடி வருகிறோம். இந்த விழா, மகர சங்கராந்தியின்போது கொண்டாடப்படுகிறது. அசாமின் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கிறோம்.

“மேஜி தீயில் அனைத்து தீமைகளும் எரிக்கப்பட வேண்டும் என்றும் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

மாக் பிஹு அல்லது போகலி பிஹு என்பது அசாமில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழா. இது ஜனவரி நடுப்பகுதியில் உள்ளூர் மாதமான மாக் மாதத்தில் அறுவடை பருவத்தின் முடிவைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அறுவடைக்குப் பிறகு மாநில மக்கள் விழாவை சமூக விருந்துகளுடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்