தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்: எச்சரிக்கும் ராகுல்

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்: எச்சரிக்கும் ராகுல்

2 mins read
f461615e-7adf-46bb-9bce-8eadf9ce162a
விலை உயர்வு ஒவ்வோர் இந்தியனையும் பாதிக்கும் என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். - கோப்புப்படம்: டெக்கான் ஹெரால்டு

புதுடெல்லி: மெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவிழந்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

தொழில்துறை எரிபொருள் விலைகளில் ஏற்படும் கடும் உயர்வால் உற்பத்தி, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் அதன் எதிரொலியாகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தகைய போக்கின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் வேகமாக வெளியேறி, பங்குச்சந்தையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒவ்வொரு குடும்பத்தின் பொருளியலையும் நேரடியாகவும் ஆழமாகவும் பாதிப்பது உறுதி,” என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளியல் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான திசையும் உத்தியும் மோடி அரசிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுவை தேர்தல்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைகளை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்றும் இந்த விலை உயர்வானது ஒவ்வோர் இந்தியனையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 100ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ, வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசி, அனைத்தும் இயல்பாக இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் விலை உயர்வு ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கும் என்பதே யதார்த்தம்.

“உங்கள் உணவுத் தட்டில் இறுதியில் என்ன மிச்சமிருக்கிறது என்பதே உண்மையான கேள்வி,” என்று ராகுல் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்