புனே: போதுமான அளவு பணம் செலுத்த முடியாததால் புனேயில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏழு மாத கர்ப்பிணியான தனிஷா பிஷே உயிரிழந்தார்.
பகுதியளவு பணம் செலுத்திய போதிலும் தாமதமான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அறிக்கைகளின்படி, தனிஷாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கர்ப்பம் தொடர்பான கடுமையான சிக்கல்களை அவர் எதிர்நோக்கியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை சிகிச்சை வழங்குவதற்கு ரூ.10 லட்சம் கோரியதாக பெண்ணின் கணவர் சுஷாந்த் பிசே கூறுகிறார்.
உடனடியாக ரூ.2.5 லட்சம் செலுத்தத் தயாராக இருந்தபோதிலும், மருத்துவமனை சிகிச்சையைத் தொடங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் அமித் கோர்கேவின் தனிச் செயலாளராகப் பணியாற்றும் சுஷாந்த் பிசே, தனது மனைவி இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து வருவதாகவும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனாலும், மருத்துவமனை சிகிச்சை அளிப்பதற்கு மறுத்துவிட்ட பின்னர், கர்ப்பிணிப் பெண்ணை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதைத் தவிர அவர்களது குடும்பத்திற்கு வேறு வழி தெரியவில்லை.
இருப்பினும், பிரசவத்திற்குப் பின்னர் தனிஷா சிக்கல்களால் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவமனையின் அலட்சியம் குறித்து குற்றம் சாட்டியுள்ள சுஷாந்த், “அவர்கள் உயிருக்கு மேலாக பணத்திற்குத்தான் முன்னுரிமை அளித்தனர். அவர்கள் சரியான நேரத்தில் என் மனைவியை சிகிச்சைக்கு அனுமதித்திருந்தால் அவள் உயிர் பிழைத்திருப்பாள்,” என்று கூறினார்.
வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுஷாந்த் பிசே சந்தித்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்போவதாக மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் அமித் கோர்கே உறுதியளித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தினாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி ரவி பலேகர், “ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முழுமையடையாதவை. அத்துடன், மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவை.
“நாங்கள் ஒரு உள் விசாரணை அறிக்கையைத் தயாரித்து வருகிறோம். அனைத்து விவரங்களையும் மாநில நிர்வாகத்திற்குச் சமர்ப்பிப்போம். இந்தக் கட்டத்தில் நான் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது,” என்று கூறினார்.
இதற்கிடையே, பிசே குடும்பத்தினரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணைக் காவல் ஆணையர் சம்பாஜி கதம் தெரிவித்துள்ளார். “அரசாங்க மருத்துவக் குழுவின் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.