பெங்களூரு: இண்டிகோ விமானத்தில் திடீரெனப் புறா ஒன்று புகுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் புறா அங்குமிங்குமாகப் பறந்து தன்னைப் பிடிக்க முயன்ற விமான நிறுவன ஊழியர்களுக்குப் போக்கு காட்டியதை, அச்சத்துக்கு இடையே பயணிகள் ரசிக்கவும் செய்தனர்.
அவர்களில் இருவர் இதை காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து திங்கட்கிழமையன்று (டிசம்பர் 8) வதோதரா செல்லும் இண்டிகோ விமானம் தயார்நிலையில் இருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த புறா ஒன்று, திடீரென விமானத்துக்குள் புகுந்துவிட்டது.
இதைக் கண்டு பயணிகள் சிலர் பீதியடைய, விமான நிறுவன ஊழியர்கள் புறாவைப் பிடிக்க முயன்றனர். உடனடியாக அவர்களால் அதைப் பிடிக்க முடியவில்லை. பின்னர், ஒருவழியாகப் புறாவை வெளியேற்றிய பின்னர் விமானம் புறப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியைப் பார்த்த பின்னர் பலரும் பின்னூட்டமிட்டுள்ளனர்.
‘எதிர்பாராத விருந்தாளி விமானத்துக்குள் வந்துவிட்டார். இண்டிகோ நிறுவனம் எப்படி இவருக்கு (புறா) கூடுதல் எடைக்கு கட்டணம் வசூலிக்கும்’, ‘இண்டிகோவுக்கு என்ன ஆனது. ஏன் நம் நிறுவனத்துக்கு மட்டும் இப்படியாகிறது’, எனப் பலவிதமான கருத்துகளை பலரும் பதிவு செய்கின்றனர்.

