ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கண்டனம் 

‘விரைவில் வருவேன்’- விமானியின் கடைசி வார்த்தையில் கபடம் இல்லை

3 mins read
44fed0be-0984-4cde-9289-601ee336f88e
சுமீத் சபர்வால் - படம்:இணையம்

கடந்த ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானியின் இறுதி வார்த்தை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்த விபத்திற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறு என்பதாகக் கூறப்பட்டு தற்போது அது விமானிகளின்மீது திரும்பியிருக்கும் நிலையில், அந்த விமானத்தை இயக்கிய தலைமை விமானி பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி சுமீத் சபர்வால், விபத்து நடந்த அன்று பணிக்குச் செல்லும்போது “விரைவில் திரும்பி வருவேன்” என்று கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.

விமான உலகின் பேரிடராகக் கருதப்படும் இந்த விபத்து தொடர்பான விசாரணையில், போயிங் 787 வகை விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எரிபொருள் விசை முடக்கநிலைக்கு மாற்றப்பட்டதாக அறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானி சுமீத் குறித்து ஊகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

விபத்துக் குறித்த புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மதிப்பாய்வு செய்த துறைசார் வல்லுநர்கள், துணை விமானி கிளைவ் குந்தர் விமானத்தை இயக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் விமானத்தில் இருந்த சுவிட்சுகளைச் செயலிழக்க செய்தது மற்றொரு விமானி சுமீத்தாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

தலைமை விமானியை நோக்கிக் குற்றச்சாட்டு நீட்டப்பட்டுள்ளதால், இந்தத் துயரச் சம்பவம் “விமானியின் தற்கொலை” என்று கூறப்படுவதற்கும் அது வழிவகுத்தது.

ஸ்கை நியூஸ்  வான் போக்குவரத்து வல்லுநர் பைரன் பெய்லி இதுகுறித்து கருத்துரைக்கையில், “விபத்தை ஏற்படுத்துவதற்கு துல்லியமாகக் கணிக்கப்பட்டு, சரியான நேரத்தில் சுவிட்சுகள் அணைக்கப்பட்டு இந்த விபத்து நிகழ்த்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

எனினும், அனைத்துலக ஊடகமான ‘தி டெலிகிராஃப்’ வெளியிட்டுள்ள  புதிய அறிக்கை, விமானி சுமீத் தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து பணிக்குப் புறப்பட்டபோது, அங்கிருந்த பாதுகாப்புக் காவலரிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் நிகழவிருந்த பேரிடர் குறித்த எந்தவொரு குறிப்பையும் தெரிவிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பணிக்குச் செல்லும்முன்னர் “தயவுசெய்து, அப்பாவைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்,” என்று அவர் சொல்லிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து செய்தித்தாளிடம் பேசிய பாதுகாப்புக் காவலர் சுனில் லோகண்டே, “சுமீத் தனக்குள்ளே எந்தச் சோகத்தையும் சுமந்திருந்ததாகத் தெரியவில்லை.  அப்படி ஏதேனும் அவர் மனத்தில் இருந்ததாக நீங்கள் நினைக்கவும் மாட்டீர்கள். சுமீத் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்,’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், அதே குடியிருப்பில் வசித்து வந்த மூப்படைந்த தம் தந்தையைப் பராமரிப்பதற்காக, பணியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்தும் சுமீத் பரிசீலித்து வந்ததாகவும், தந்தையை முழுநேரமாக உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் திட்டம்” என்றும் விளக்கியுள்ளார், மறைந்த சுமீத்தின் நண்பரும் முன்னாள் சக ஊழியருமான நீல் பைஸ்.

விமானி சுமீத் ஒருபோதும் குரலை உயர்த்தியோ, அல்லது கோபப்படுவதையோ தாம் பார்த்ததில்லை எனவும், பணி சார்ந்த பாதுகாப்பில் ஒருபோதும் சுமீத் சமரசம் செய்துகொண்டதுமில்லை; இது உண்மை, எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாகக் கூறிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஊகங்களை கிளப்பிய ஊடகங்களை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்